×

2வது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்தியா: இரட்டை சதம் விளாசினார் ஜெய்ஸ்வால்

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற இந்தியா வலுவான நிலையில் உள்ளது. ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன் எடுத்திருந்தது (93 ஓவர்). ஜெய்ஸ்வால் 179 ரன் (257 பந்து, 17 பவுண்டரி, 5 சிக்சர்), ஆர்.அஷ்வின் 5 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.  அஷ்வின் 20 ரன் எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் வெளியேற, அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசி அசத்தினார்.

ஜெய்ஸ்வால் 209 ரன் (290 பந்து, 19 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஆண்டர்சன் பந்துவீச்சில் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். பும்ரா 6 ரன்னில் வெளியேற, முகேஷ் குமார் டக் அவுட்டானார். இந்தியா முதல் இன்னிங்சில் 396 ரன் குவித்து ஆல் அவுட்டானது (112 ஓவர்). குல்தீப் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், ரெஹான் அகமது, சோயிப் பஷிர் தலா 3, ஹார்ட்லி 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, கிராவ்லி – டக்கெட் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தது. டக்கெட் 21 ரன், கிராவ்லி 76 ரன் (78 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ரூட் 5, போப் 23, பேர்ஸ்டோ 25 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 159 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.
ஃபோக்ஸ், ரெஹான் தலா 6 ரன் எடுத்து குல்தீப் சுழலில் மூழ்கினர்.

நம்பிக்கையுடன் அடித்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 47 ரன் (54 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஹார்ட்லி 21, ஆண்டர்சன் 6 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்னுக்கு சுருண்டது (55.5 ஓவர்). பஷிர் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பும்ரா 15.5 ஓவரில் 5 மெய்டன் உள்பட 45 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் 3, அக்சர் 1 விக்கெட் வீழ்த்தினர். 143 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 15, ரோகித் 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post 2வது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்தியா: இரட்டை சதம் விளாசினார் ஜெய்ஸ்வால் appeared first on Dinakaran.

Tags : India ,Jaiswal ,Visakhapatnam ,England ,YSR Stadium ,Dinakaran ,
× RELATED வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்